உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர்தல் பணியில் போலீசார், வருவாய்த்துறை தீவிரம்: நாமக்கல் தொகுதியில் மணல் கடத்தல் ஜரூர்

தேர்தல் பணியில் போலீசார், வருவாய்த்துறை தீவிரம்: நாமக்கல் தொகுதியில் மணல் கடத்தல் ஜரூர்

நாமக்கல்:போலீசார், வருவாய்த்துறையினர் லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தி வருவதால், நாமக்கல் தொகுதியில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது.நாமக்கல் மாவட்டம், மோகனுார் அடுத்த ஒருவந்துாரில் அரசு மணல் குவாரி செயல்பட்டது. இங்கிருந்து மணல் எடுத்து வரப்பட்டு, வளையப்பட்டி சாலை செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அரசு மணல் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, 'ஆன்லைன்' மூலம் விற்பனை செய்யப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், சட்ட விரோதமாக மணல் விற்பனை மேற்கொள்வதாகவும் புகார் கூறப்பட்டது. 2023 செப்., 12ல், அமலாக்கத்துறை அதிகாரிகள், திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, மணல் குவாரி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மோகனுார் அடுத்த மணப்பள்ளி, கொமராபாளையம், செங்கப்பள்ளி ஆகிய கிராம பஞ்., பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில், மணல் கொள்ளை அரங்கேற்றப்படுகிறது. டூவீலரில் மூட்டையாக கட்டி எடுத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கொட்டி குவிக்கின்றனர். அங்கிருந்து, சரக்கு ஆட்டோ, லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இதற்காக, ஒரு மூட்டைக்கு, 50 முதல், 70 ரூபாய் தரப்படுகிறது. ஒரு யூனிட் மணல், 10,000 முதல், 15,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மணல் கொள்ளை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் ஆதரவுடன் அரங்கேறுவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் பணியில் வருவாய்த்துறை, போலீசார் கவனம் செலுத்துகின்றனர். இது, மணல் கடத்தல் கும்பலுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் லோக்சபா தேர்தல் களை கட்டியுள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டு, ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.தேர்தல் விதிமீறல்கள், அதிகளவில் பணம், பொருள் கொண்டு செல்வதை கண்டறியும் பணிகளில் இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதனால், போலீசார் உள்பட அனைத்து துறை அலுவலர்களின் ஒட்டுமொத்த கவனமும், லோக்சபா தேர்தலில் உள்ளன. இது, மணல் கடத்தல் கும்பலுக்கு சாதகமாக உள்ளது.லோக்சபா தேர்தல் பணி கண்காணிப்பு அவசியம் என்றாலும், மணல் கடத்தலை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை