| ADDED : ஜூலை 21, 2024 02:42 AM
நாமக்கல்;'கூடுதல் மகசூல் பெற விதை பரிசோதனை அவசியம்' என, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் தேவிப்பிரியா, சரண்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் வெளியிட்ட அறிக்கை:'ஆடி பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. பருவமழை ஆரம்பிக்கும் காலம் என்பதால், ஆடி மாதத்தில் விதைகளை விதைக்கும்போது, அதிக மகசூலை பெறலாம். தண்ணீர் வசதியுள்ள விவசாயிகள் நாற்று விடுதல், விதைப்பு செய்தல் பணிகளை மேற்கொள்வர். விதையே விவசாயத்திற்கு ஆதாரம் என்பதால், தரமான விதையை தேர்வு செய்து, விதை நேர்த்தி செய்து, சாகுபடி செய்தால் சரியான பயிர் எண்ணிக்கையை உறுதி செய்து, அதிக மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம்.விதையின் சுத்தத்தன்மை, ஈரப்பதம், முளைப்புத்திறன் ஆகியவற்றை நல்ல முறையில் பராமரிப்பதால் மட்டுமே நல்ல மகசூலை பெற முடியும். அதனால், விவசாயிகள் தாங்கள் விதைப்பு செய்ய உள்ள விதையின் தரத்தை அறிய, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டடத்தில் உள்ள விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையின் கீழ் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில், விதை மாதிரி ஒன்றுக்கு, 80 ரூபாய்- கட்டணம் செலுத்தி, விதையின் முளைப்புத்திறன், சுத்தத்தன்மை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை அறிந்து விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.