| ADDED : ஜூன் 19, 2024 02:09 AM
பனமரத்துப்பட்டி:நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்த 'ஸ்கேட்டிங்' பயிற்சியாளர் பிரபாகரன், 29. இவர், சேலம் கன்னங்குறிச்சியில், ஸ்கேட்டிங் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம், சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், 13 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி அளித்தார். அதை சிறுவர்களின் பெற்றோர், வீடியோ எடுத்து பகிர்ந்தனர். ஆபத்தான நெடுஞ்சாலையில் சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பயிற்சியாளர் மீது, நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இதையடுத்து, நேற்று மல்லுார் போலீஸ் ஸ்டேஷனில், பயிற்சியாளர், சிறுவர்களின் பெற்றோரிடம் பேசிய சேலம் புறநகர் டி.எஸ்.பி., அமலஆட்வின் கூறியதாவது:கடந்த ஐந்து மாதங்களில் இந்த நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஆபத்தான நெடுஞ்சாலையில், ஸ்கேட்டிங் பயிற்சி அளித்ததும், சிறுவர்களை அனுப்பி வைத்ததும் குற்றமே. அவர்களுடன், பெற்றோர்களாகிய நீங்கள் இரு சக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' போடாமல் சென்றுள்ளீர்கள். மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றால் பெருமை தான். ஆனால், முதலில் பாதுகாப்பு தான் முக்கியம். பயிற்சியாளர் பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.