உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம்

கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம்

நாமக்கல், ''ஒரு வாரத்தில், கள்ளுக்கான தடையை நீக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை பூட்டு போட்டு மூடும் போரட்டம் நடத்தப்படும்,'' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி கூறினார்.தென்னை விவசாயிகளை காப்பாற்றும் வகையில், தமிழகத்தில் கள் இறக்க உள்ள தடையை நீக்க கோரி, நாமக்கல் அருகே தென்னை மரத்தில் கள் கட்டும் போராட்டம் நடந்தது. நாமக்கல் மாவட்டம், கோனுார் பஞ்., விவசாய தோட்டத்தில் உள்ள தென்னந்தோப்பில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், முதன் முதலாக, தென்னை மரத்தில் முட்டி கட்டி கள்ளு இறக்கும் போராட்டம், நேற்று நடந்தது. ஏராளமான விவசாயிகள், அங்கிருந்த தென்னை மரங்களில் மண் சட்டிகளை கட்டினர். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், தென்னை சாகுபடி செய்யும் பரப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தேங்காய் அதிக அளவில் உற்பத்தியாகி, அடிக்கடி விலை சரிவு ஏற்படுகிறது. தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல், தென்னை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. நாட்டுக்கும், வீட்டுக்கும், மனித உயிருக்கும் தீங்கு விளைவிக்காத, உணவில் ஒரு பகுதியாக தென்னை மரத்தில் இருந்து கலப்படம் இல்லாமல் வரக்கூடியது தென்னங்கள் ஆகும். தென்னை விவசாயிகளின் நலன் கருதி, தென்னை மரத்தில் இருந்து கள்ளுக்கட்டி விற்பனை செய்ய தமிழகம் முழுதும் கள்ளுக்கடைகளை திறக்க, தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தோம்.இதுவரை கள்ளுக்கடைகளை திறக்க எந்தவிதமான நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. அதனால், இன்று (நேற்று) முதல் கட்டமாக, தென்னை மரத்தில் முட்டி கட்டும் போராட்டத்தை துவுங்கி உள்ளோம்.மேலும், கள்ளுக்கான தடையை ஒரு வாரத்தில் நீக்காவிட்டால், விரைவில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி பூட்டு போட்டு மதுக்கடைகளை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், பொருளாளர் ராஜேஷ், நாமக்கல் மாவட்ட தலைவர் பொன்னுசாமி, வேலுார் மண்டல செயலாளர் வெங்கடபதிரெட்டி, மதுரை மண்டல செயலாளர் ராஜேந்திரன், சேலம் மாவட்ட தலைவர் வேல்முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி