திருச்செங்கோடு, ''மினி டெக்ஸ்டைல் பார்க் உருவாக்க நெசவாளர்கள் முன் வரவேண்டும்,'' என, நாமக்கல் கலெக்டர் உமா கேட்டுக்கொண்டார்.பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு, சூரியம்பாளையம் செங்குந்தர் சமுதாய கூடத்தில், மருத்துவ முகாம், சிறப்பு கைத்தறி கண்காட்சி நடந்தது. திருச்செங்கோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் பழனிக்குமார் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் நளினி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா மருத்துவ முகாம், நலத்திட்ட உதவி, சிறப்பு கைத்தறி கண்காட்சியை திறந்து வைத்து, பொருள் விற்பனையை தொடங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு கைத்தறி துறை, திருச்செங்கோடு மண்டலம் மூலம், பத்தாவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி, 73 நெசவாளர்களுக்கு, 'முத்ரா' கடன் உதவி, மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தில், நான்கு பயனாளிகளுக்கு நிதி உதவி, விசைத்தறி கூடம் அமைத்தல், விசைத்தறி உபகரணங்கள், ஜக்கார்டு இயந்திரங்கள் என, மொத்தம், 103 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழக அரசு, கடந்த ஓராண்டுக்கு முன், 'மினி டெக்ஸ்டைல் பார்க்' என்ற ஒன்றை துவங்கி உள்ளது. 5 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கி, அதில் மானியமாக, இரண்டரை கோடி ரூபாய் வழங்குகிறது. ஒரே குடும்பத்தை சேராத ரத்த வழி உறவு இல்லாத, மூன்று பேர் இணைந்து, 15 ஏக்கர் நிலம் வாங்கி, 17 வகையான தொழில்கள் செய்ய இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இதுவரை ஒருவர் கூட இதற்காக விண்ணப்பிக்கவில்லை. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் விண்ணப்பங்கள் வந்துள்ளன. நெசவு தொழிலை பிரதானமாக கொண்டுள்ள நாமக்கல் மாவட்டத்தில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, 'மினி டெக்ஸ்டைல் பார்க்' உருவாக்க நெசவாளர்கள் முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். திருச்செங்கோடு நகர்மன்ற துணைத்தலைவர் கார்த்திகேயன், கவுன்சிர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.