நாமக்கல், பல்வேறு மாவட்டங்களில் பல நுாறு கோடி ரூபாய்க்கு தேங்கியுள்ள ஜவுளி துணிகளை வர்த்தகம் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார், விசைத்தறி துணி உற்பத்தியாளர் சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது:தமிழகத்தில், விவசாயத்துக்கு இணையாக நெசவு தொழில் விளங்குகிறது. நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில், பிரதான தொழிலாகவும் உள்ளது. இதன் மூலம் லுங்கி, துண்டு, வேட்டி, சர்ட் பீஸ் ரகங்கள் என, ஒரு நாளைக்கு, 100 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படுகிறது.சீனா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த, 10 ஆண்டாக நெசவு தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள உலக சந்தைக்கு, ஜவுளி ஏற்றுமதியில் சீனா முதலிடம் வகிக்கிறது. அடுத்த வியட்நாம், கம்போடியா, இந்தோனேசியா மற்றும் வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் ஜவுளி ஏற்றுமதியில் கோலோச்சுகின்றன. பெரிய நாடாக உள்ள இந்தியா, 4 சதவீதம் மட்டுமே ஏற்றுமதி செய்து, கடைசி இடத்தில் உள்ளது.இதன் காரணமாக, பல நுாறு கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி செய்த ஜவுளிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை தாக்குப்பிடிக்க முடியாமல், பெரும்பாலான விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பா.ஜ., அரசின் ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ்சிங், இணை அமைச்சர் பபித்ரா மார்கிரிட்டா, ஜவுளி ஏற்றுமதிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.