நாமக்கல், 'லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை இலக்காக கொண்டு செயல்படும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்தழைப்பு அளிக்க, ஏப்., 19ல் பணியாளருக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் கூறினார்.வணிக நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் உமா துவக்கி வைத்தார். தமிழக வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை வகித்தார்.கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பில் வழங்கும்போது, அதில், 'தேர்தல் நாள் ஏப்., 19' என பிரின்ட் செய்தோ அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்தோ வழங்க வேண்டும் என, அறிவுறுத்தினார். கடை உரிமையாளர்கள், தங்களது கடைகளுக்கு முன், தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா வலியுறுத்தினார்.தொடர்ந்து, 'தேர்தல் நாளான, ஏப்., 19ல், பணியாளர்கள் ஓட்டுப்போடுவதற்கு ஏதுவாகவும், விடுமுறை அளித்து, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்பதை இலக்குடன் செயல்படும் மாவட்ட நிர்வாகத்திற்கு, வணிகர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அறிவுறுத்தினார்.ஆர்.டி.ஓ., பார்த்திபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன், பேரமைப்பின் மாவட்ட செயலாளர் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.