நாமக்கல், 'நாமக்கல் மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட, எஸ்.ஐ.ஆர்., படிவங்களை சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அனைத்து ரேஷன் கடைகள் ஆகியவற்றில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று, பி.எல்.ஓ., ஆப் மூலம் பதிவேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த, 'சிறப்பு தீவிர திருத்தம்--2026' தொடர்பாக, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை, பூர்த்தி செய்து மீண்டும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், தொடர்புடைய வாக்காளர்கள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, இன்று(நேற்று) முதல், அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்கள், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து ரேஷன் கடைகள் ஆகியவற்றில், தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, நாமக்கல் மாவட்டத்தில் முழுநேரம் மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் என, ராசிபுரம் சட்டசபை தொகுதியில், 176 கடைகள், -சேந்தமங்கலத்தில், 165, நாமக்கல்லில், 177, ப.வேலுாரில், 176, திருச்செங்கோட்டில், 163, -குமாரபாளையத்தில், 70 கடைகள் என, ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 927 ரேஷன் கடைகள் செயல்படவுள்ளன.வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட தங்களது வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை, அருகில் உள்ள ஓட்டுச்சாவடி மையம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ரேஷன் கடை விற்பனையாளரிடம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.