| ADDED : பிப் 04, 2024 04:11 PM
எருமப்பட்டி:பவித்திரம் வார்டு உறுப்பினரின் வீட்டிற்கு, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், பைக்கிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே பவித்திரத்தை சேர்ந்தவர் சங்கீதா, 34. பவித்திரம் பஞ்.,ல் மூன்றாவது வார்டு உறுப்பினராக உள்ளார். இவர், சில ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார். பவித்திரம் முசிறி ரோடு கிழக்கு தெருவில் இவரது வீடு உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி வரை இவரது கணவர் சரவணன் வீட்டின் கீழ் தளத்தில் துாங்கி கொண்டிருந்தார். பின், மாடியில் சென்று படுத்துள்ளார்.நள்ளிரவு, 1:00 மணியாளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டின் தரை தளத்தில் உள்ள வளாகத்தில், ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து, அங்கிருந்த இவரது பைக்கிற்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதால், சரவணன் கீழே வந்து பார்த்த போது பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சரவணன் கூச்சலிட்டதால், அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் பைக் எரிந்து நாசமானது. மேலும் அதன் அருகில் இருந்த பீரோ, மின் சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்ததாக போலீசார் சந்தேகம் அடைந்ததால், சேலம் தடயவியல் உதவி இயக்குனர் வடிவேல் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.சில மாதங்களுக்கு முன்பு சரவணன் அண்ணன் மகள் காதலனுடன் சென்றதால், அவர்களுக்கும் சரவணனுக்கும் முன் விரோதம் காரணமாக, தீ வைப்பு சம்பவம் நடத்திருக்குமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.