நாமக்கல் : 'உரிய நேரத்தில் பார்சலை கொண்டு சேர்க்காத தனியார் டிராவல்ஸ் நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நாமக்கல், பரமத்தி வேலுாரில் வசித்து வருபவர் கணேசன், 54. இவர் கடந்த, 2023 ஜூனில், சென்னையில் உள்ள தன் மகனுக்கு சைக்கிள் ஒன்றை வாங்கி, சேலத்தில் உள்ள தனியார் பஸ் டிராவல்ஸ் மூலம், ப.வேலுார் கிளையில், 520 ரூபாய் கட்டணம் செலுத்தி அனுப்பி வைத்தார். 'ஓரிரு நாளில் சைக்கிள் சென்னையில் உள்ள தங்கள் நிறுவன அலுவலகத்துக்கு சென்று விடும்; அங்கு சைக்கிளை பெற்றுக்கொள்ளலாம்' என, பார்சல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், 2 மாதம் கடந்தும் சைக்கிளை பஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட நபரிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதனால், சைக்கிளை பார்சலில் அனுப்பிய கணேசன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், தனியார் பஸ் கம்பெனி மீது வழக்கு தெடர்ந்தார். வழக்கை விசாரித்த, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர், நேற்று தீர்ப்பளித்தனர். அதில், டிராவல்ஸ் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும், வாடிக்கையாளரிடம் இருந்து பெற்ற சைக்கிள் பார்சலை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்காமல் சேவை குறைபாடு செய்துள்ளனர். எனவே, வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட இழப்பு, மன உளைச்சல், சிரமங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடாக, 4 வாரங்களுக்குள், டிராவல்ஸ் நிறுவனமும், அதன் கிளை அலுவலகமும் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.