உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வெட்டி வேர் மாலையில் தீ

ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட வெட்டி வேர் மாலையில் தீ

நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சாற்றப்பட்ட வெட்டிவேர் மாலை தீப்பிடித்து எரிந்ததால், 'அக்னிர் தாக பிராயசித்தம்' என்ற சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. சுவாமிக்கு கட்டளைதாரர்கள் மூலம் தினசரி தங்கக்கவசம், முத்தங்கி சாற்றப்பட்டு, பல்வேறு வகை அலங்காரங்கள் செய்யப்படும். நேற்று காலை சிறப்பு அபிேஷகத்திற்கு பின் வெட்டிவேர் மாலை அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 4:30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜை நடைபெற்றது. மாலை, 6:00 மணியளவில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தபோது, திடீரென வெட்டிவேர் மாலை தீப்பிடித்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மாலை யை அகற்றி, தீ அணைக்கப்பட்டது. கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டு, தோஷ நிவர்த்திக்கான, 'அக்னிர்தாக பிராயசித்தம்' என்ற சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. அதன் பின் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து நாமக்கல் நகர பகுதி மக்கள், தங்கள் வீடுகள் முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், 'கொரோனா காலத்தில் பக்தர் ஒருவர் சுவாமிக்கு வெட்டிவேர் மாலை வழங்கினார். சிறப்பு அலங்காரம் ஏதும் இல்லாதபோது வெட்டிவேர் மாலையை அணிவிப்பது வழக்கம். ஐந்து ஆண்டுகளாக வெயிலில் காய்ந்திருந்ததால் தீபாராதனை காண்பித்தபோது திடீரென தீப்பற்றியது. இது எதிர்பாராத நிகழ்வு; தோஷம் ஏதுமில்லை. பக்தர்கள் அச்சப்பட தேவையில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை