நாமகிரிப்பேட்டை:நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 32; முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர்.இவர், சேலத்தில் தங்கியுள்ளார். நாரைக்கிணறு பகுதியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில், அருண்பிரகாஷ் மனைவி அருள்பிரியா, 30, தந்தை செல்வகுமார், 60, தாய் விஜயலட்சுமி, 55, ஆகியோர் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணியளவில், இரு கார்களில், 6 பேர் கொண்ட கும்பல் தோட்டத்து வீட்டிற்கு வந்தனர். அவர்கள், அருண் பிரகாஷின் வீட்டு கேட்டில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமராக்களை உடைத்து எறிந்தனர்.பின், வீட்டிற்குள் நுழைய முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அருள்பிரியா, மர்ம நபர்களை கண்டு கூச்சலிட்டார். இதனால் பயந்து போன கும்பல், அங்கிருந்து தப்பி ஓடியது. உடனடியாக ஆயில்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தப்பிய கும்பலை பிடிக்க, ராசிபுரம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில், மூன்று தனிப்படை அமைத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.