| ADDED : ஜூன் 02, 2024 06:37 AM
நாமக்கல் : நாமக்கல் கலெக்டர் உமா, கடந்த, 17ல், ராசிபுரம் பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள காரில் சென்றார். அப்போது, நாமக்கல் - சேலம் மெயின் ரோடு, பொம்மைகுட்டைமேடு அருகே சென்றபோது, அவ்வழியாக டூவீலரில் சென்ற, நாமக்கல் செல்லப்பம்பட்டி, மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த சதீஷ், 38, என்பவர், சாலை விபத்தில் காயமடைந்து கீழே விழுந்து கிடந்தார்.இதையறிந்த கலெக்டர் உமா, காரை நிறுத்தி காயமடைந்த சதீஷை மீட்டு, மற்றொரு அரசு வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கலெக்டரின் அறிவுறுத்தல்படி, அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சதீஷ் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 15 நாட்கள் சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்தார். இதை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்த சதீஷ், கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து, தக்க நேரத்தில் உதவி செய்து உயிரை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தார்.