மோகனுார் : மோகனுார் காவிரி கரையோரம், பிரசித்தி பெற்ற அசலதீபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சுவாமி, மதுகரவேணி அம்பாள் சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய விசேஷ நாட்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம்.இந்நிலையில், ஆனிமாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, மூலவர் அசலதீபேஸ்வரர் மற்றும் நந்திபகவானுக்கு, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருமஞ்சனம், பச்சரிசி மாவு கரைசல், மஞ்சள், சந்தனம், விபூதி, கலச தீர்த்தம் என, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருக்கோவிலை மூன்று முறை சுற்றிவந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.* சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், நந்தி, சிவனுக்கு, பால், தயிர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.* ப.வேலுார் எல்லையம்மன் கோவிலில், 400 ஆண்டு பழமையான ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், ப.வேலுார் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.* குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. இதேபோல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.