உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 13, 15ல் கல்லுாரி கனவு முகாம்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 13, 15ல் கல்லுாரி கனவு முகாம்

நாமக்கல் : 'பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, வரும், 13ல் ராசிபுரத்திலும், 15ல், குமாரபாளையத்திலும், கல்லுாரி கனவு முகாம் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'நான் முதல்வன்' திட்டம், 2022 மார்ச், 1ல் முதல்வர் ஸ்டாலினால் துவங்கப்பட்டது. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் சேரவும், உயர்கல்வி சேர்ந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரசு பள்ளி மாணவ, மாணவியர், 8,061 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள், உயர்கல்வியில் சேர வழிகாட்டும் வகையில், கல்லுாரி கனவு முகாம், வரும், 13ல் ராசிபுரம் பாவை கல்லுாரியில், 2,000 மாணவ, மாணவியருக்கும், வரும், 15ல் குமாரபாளையம் ஜே.கே.கே., நடராஜா கல்லுாரியில், 1,000 மாணவர்களுக்கும் நடக்கிறது.கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, பாரதியார் பல்கலை ஆலோசகர் சுப்ரமணியன், ஆசான் கல்வி அறக்கட்டளை முதன்மை அலுவலர் தொல்காப்பியன், அரசு மற்றும் அரசு கால்நடை மருத்துவ கல்லுாரி தலைமை விரிவுரையாளர் குமரவேல் ஆகியோர் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்தும், ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவரம்பன் ஆகியோர் போட்டி தேர்வுகள் பற்றியும் பேசுகின்றனர்.இந்த முகாமில், அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு, 'கல்லுாரி கனவு' புத்தகம் வழங்கப்படும். உயர்கல்வி சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் பெற, இ--சேவை மையம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆதார் அட்டை, புகைப்படங்கள் (நான்கு) மற்றும் சான்றிதழ் நகல்கள் எடுத்து வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை