உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 2 டன் பூக்களால் அலங்காரம்: கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு தடை

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு 2 டன் பூக்களால் அலங்காரம்: கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு தடை

நாமக்கல்: ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 2 டன் பூக்களால், கோவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, இன்று (ஜன., 11), ஒருநாள் மட்டும் கோட்டை சாலையில், வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லால் செதுக்கப்பட்ட, 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.விழாவையொட்டி, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, 1.08 லட்சம் வடைமாலை சாத்தப்படுகிறது. காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, தங்க கவச அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.நாமக்கல்லை சேர்ந்த பக்தர்கள், கோவிலை பூக்களால் அலங்காரம் செய்தனர். கோவிலின் நுழைவு வாயிலில், 'அனுமன் ஜெயந்தி' என, மலர் மாலைகளால் அலங்காரம் செய்திருந்தனர். அதற்காக, 2 டன் சாமந்தி, ஆஸ்டர் வகை பூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த, 7ல், 1.08 லட்சம் வடைமாலை தயாரிக்கும் பணி துவங்கப்பட்டு, நேற்று மதியம் நிறைவு பெற்றது.இதையடுத்து, 1,008 வடைகள் கொண்ட மாலையாக தொடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பக்தர்கள் வரிசையாக சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக, இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்படுகளை போலீசார் செய்துள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக கோட்டை சாலையில், இன்று ஒருநாள் மட்டும், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை