| ADDED : மே 03, 2024 07:26 AM
சேந்தமங்கலம் : முத்துக்காப்பட்டி, மகா மாரியம்மன் கோவில் அறங்காவலர் நியமனத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தர்ணா போராட்டம் நடந்தது.சேந்தமங்கலம் அருகே முத்துக்காப்பட்டியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இந்தாண்டு அறங்காவலர் நியமனம் செய்ததில், கோவில் நிர்வாகிகளுக்கு தெரியாமல் நியமனம் செய்யப்பட்டதாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருவிழா நடத்தப்படுவது தடைபட்டிருந்தது.எனவே, விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பஞ்., தலைவரின் தலையீட்டால் கோவிலில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக கூறி, நேற்று கிராம மக்கள் கோவில் வளாகத்தில் தர்ணா போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கு சென்ற தாசில்தார் சத்திவேல், டி.எஸ்.பி., ஆனந்தராஜ், நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன், ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் சந்தியா உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட உறுப்பினரை விலக்கி கொள்வது என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யும் புதிய நபரை உறுப்பினராக தேர்வு செய்வது என்றும், ஊர் பொது மக்கள் இணைந்து திருவிழா நடத்தி கொள்ளலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.