நாமக்கல், : 'மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மகன், மகள் படிக்கும் பெயரை சொல்லி, உதவித்தொகை வழங்குவதாக கூறி வங்கி விபரங்ளை கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம்' என, நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:உங்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கல்வி துறையில் இருந்து பேசுவதாக கூறி உங்களுடைய மகன் அல்லது மகள் படிக்கும் பள்ளி பெயரை சொல்லி உதவித்தொகை வழங்குவதாக கூறி, வங்கி விபரங்களை கேட்டால் கொடுத்து ஏமாற கூடாது.உங்களது வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை பணம் வரும் என்று கூறுவதை நம்பி ஏமாற வேண்டாம். உங்கள் பகுதியில் உள்ள தெரிந்த நபர்கள் அல்லது நண்பர்கள் மற்றும் உறவினர்கள், பிரபல நிறுவனங்களின் பெயரில் உள்ள போலியான மொபைல் செயலிகளை அறிமுகப்படுத்தி, அதில் முதலீடு செய்தால் தினமும் வருமானம் வரும் மற்றும் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, பணம் முதலீடு செய்ய சொல்லி பரிந்துரை செய்தால், அதை நம்பி பணம் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.உங்களை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, பள்ளி அல்லது கல்லுாரியில் படிக்கும் உங்கள் மகன் அல்லது மகளை போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்வதாகவோ அல்லது கடத்தி விட்டதாகவோ கூறி, உடனே பணம் அனுப்ப வேண்டும் என்று கூறினால், உங்களது மகன் அல்லது மகளை உடனே தொடர்பு கொண்டு அவர்கள், பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பணம் ஏதும் அனுப்பி ஏமாற வேண்டாம்.மொபைல் போனிலோ அல்லது வாட்ஸாப் கால் மூலமாகவோ, உங்களை தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள், தாங்கள் மும்பை மற்றும் டில்லி போலீஸ் அதிகாரிகள் என்றோ அல்லது சி.பி.ஐ., அதிகாரிகள் என்றோ அறிமுகப்படுத்தி கொண்டு உங்கள் பெயர், ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் அனுப்பப்பட்டு உள்ளதாகவோ அல்லது உங்களது வங்கி கணக்கில் முறைகேடாக பணப்பரிவர்த்தனை நடைபெற்று உள்ளதாகவோ கூறி 'ஸ்கைப்' போன்ற வீடியோ கால் மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி மிரட்டி உங்களுடைய தனிப்பட்ட விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கேட்டால் கொடுத்து ஏமாற கூடாது.பணம் கேட்டு மிரட்டினாலும் கொடுத்து ஏமாற கூடாது. உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் உடனடியாக, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்க வேண்டும். அல்லது www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.