நாமக்கல்: 'பண்ணைக்கழிவுகளில் இருந்து மட்கும் உரம் தயாரிக்க, வரும், 20ல் விவசாயிகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது' என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கிராமங்களில் பண்ணைக் கழிவுகளை எரியூட்டாமல், மறுசுழற்சி செய்து மட்கும் உரமாக்குதல் பற்றிய, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம், வரும், 20 காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இப்பயிற்சியில், எளிதில் மட்கக்கூடிய பண்ணைக் கழிவுகளின் வகைகள், எளிதில் மட்கச்செய்ய தேவைப்படும் நுண்ணுயிரி வகைகள், மண்புழு வகைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு இல்லாமல் நுண்ணுயிரிகள் கொண்டு மட்கும் உரம் தயாரித்தல், நுண்ணுாட்டச்சத்து மற்றும் உயிர் உரங்கள் கொண்டு செறிவூட்டப்பட்ட சத்து அதிகம் கொண்ட உரம் தயாரித்தல், கோழி எரு மட்கச் செய்தல், தென்னை நார்க்கழிவுகளை மட்கச் செய்தல், மட்கும் உரத்தை செடிகளுக்கு இடும் முறைகள், மண்ணிலிடுவதால் மண்வளம் மற்றும் பயிர் வளர்ச்சியில ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெளிவாக விளக்கவுரை அளிக்கப்படும்.மேலும் தென்னை நார்கழிவு, கால்நடை கழிவுகள், இலைத்தழைகள், மண்புழு உரம் தயாரித்தல், மண்புழு உற்பத்தி செய்தல் குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும். தென்னை மட்டைகளை துண்டடிக்கும் இயந்திரம் மற்றும் கரும்பு சோகையை துண்டடிக்கும் இயந்திரம் குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்படும்.இதில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். முதலில் பதிவு செய்யும், 100 பயனாளிகளுக்கு மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது, 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு, 19 மாலை, 5:00 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.