| ADDED : ஜூன் 16, 2024 06:41 AM
நாமக்கல் : 'ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்' என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., விளக்க வாயிற்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யு., சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, விளக்க வாயிற் கூட்டம், நாமக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், நேற்று நடந்தது. சி.ஐ.டி.யு., உதவி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வேலுசாமி, பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கிளை செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உதவி தலைவர் ஜெயக்கொடி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார்.போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதி அடிப்படையில், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.