நாமக்கல், ''முட்டை உற்பத்தி, 15 சதவீதம் குறைந்துள்ளதால், கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. யாரும் பதுக்கவில்லை,'' என, முட்டை வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தன் கூறினார்.நாமக்கல்லில், நேற்று முட்டை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் மயில்சாமி, பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து, சங்க தலைவர் ஆனந்தன் கூறியதாவது:நாமக்கல், ஈரோடு, கரூர், சேலம், திருப்பூர், தர்மபுரி மாவட்டங்களில், 1,300 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும், 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்தாண்டில் அதிகபட்சமாக, முட்டை கொள்முதல் விலை, 610 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகம் என்றும், முட்டைகளை பதுக்குகிறார்கள் என்றும் சிலர் கூறுவது சாத்தியமில்லை. ஒவ்வொரு ஆண்டும் நவ., டிச., மழைக்காலங்களில் முட்டை உற்பத்தி குறையும். அதனால், முட்டை விலை உயரும். இது, 30 ஆண்டுகளின் வரலாறு. 2021ல், நவ., டிச.,ல், அதிகபட்ச விலையாக, 520 காசாக இருந்தது. அதேபோல், 2022ல், 550 காசு, 2023ல், 585 காசு, 2024ல், 590 காசு என விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்தாண்டு அதிகபட்ச விலையாக, 610 காசாக உயர்ந்துள்ளது. கோழிப்பண்ணையாளர்களுக்கு சராசரியாக, ஒரு முட்டைக்கு, 495 காசு தான் கிடைக்கிறது. வரும் நாட்களில், முட்டை விலை, 600 காசுக்கு மேல் இருந்தால் தான் கோழிப்பண்ணைகளை நடத்த முடியும். ஒரு சில வியாபாரிகள், கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்வதாகவும், முட்டை கிடைப்பதில்லை என்றும் சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கின்றனர். தென்மாவட்டங்களில் முட்டை கிடைப்பதில்லை எனக்கூறுவதும் தவறு. முட்டை வழக்கம் போல், அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. கோழிப்பண்ணையாளர்கள் யாரும் முட்டைகளை பதுக்கவில்லை. இந்தாண்டு, நவ., டிச., மாதங்களில், பனிக்காலம் என்பதால், முட்டை உற்பத்தி, 15 சதவீதம் குறைந்துள்ளது. அதனால், கொள்முதல் விலை அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.