கொல்லிமலையில் 13 இடங்களில் மொபைல் டவர்; ஒரு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு
நாமக்கல்: கொல்லிமலையில், 13 இடங்களில் புதிதாக மொபைல் போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. இவை, ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கொல்லிமலையில், 50,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களும், மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். ஆனால், இங்கு மூன்று மொபைல் போன் டவர்கள் மட்டுமே உள்ளன. அதன் காரணமாக, பல இடங்களில் சிக்னல் கிடைக்காமல், மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதையடுத்து, கொல்லிமலையில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நலன் கருதி, எடப்புளிநாடு, பெரக்கரைநாடு, அடக்கம்புதுக்கோம்பை, குண்டலிநாடு, அரியூர்நாடு, ஆலந்துார்நாடு, சித்துார்நாடு, சேளூர்நாடு, தேவனுார்நாடு, அரியூர்சோலை உள்ளிட்ட, 13 இடங்களில், தலா, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், புதிய மொபைல் போன் டவர் அமைக்க பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில், மூன்று மொபைல் போன் டவர்கள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு மாதத்தில் பணிகள் முடியும்இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:- கொல்லிமலையில் ஏற்கனவே, 3 இடங்களில் மட்டுமே மொபைல் போன் டவர்கள் உள்ளன. தற்போது, 13 இடங்களில் கோபுரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, சித்துார்நாடு, திருப்புளிநாடு, குண்டூர்நாடு ஆகிய, 3 இடங்களில் பணி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பெரக்கரைநாட்டிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீதமுள்ள, 9 இடங்களில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை, ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.