உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: வெளியூர் சென்றால் தகவல் தெரிவியுங்க

பூட்டிய வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை: வெளியூர் சென்றால் தகவல் தெரிவியுங்க

நாமக்கல் : 'வெளியூர் செல்லும் பொதுமக்கள், போலீசாரிடம் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு, குற்றச்சம்பவங்களை தடுக்க முடியும்' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.நாமக்கல் - மோகனுார் சாலை, கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் செந்தில், 48. இவரது மனைவி நிர்மலா. தம்பதியருக்கு, பிரகதீஷ் என்ற மகன் உள்ளார். செந்தில், தள்ளுவண்டி கடையில் டிபன் கடை நடத்தி வருகிறார். கடந்த, 5ல் வீட்டை பூட்டிவிட்டு, மனைவி, மகனுடன், சேந்தமங்கலம் அடுத்த மகாதேவியில் உள்ள மருமகன் வீட்டுக்கு, திருவிழாவிற்கு சென்றார்.இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்த, 21.5 பவுன் நகை, 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல், கடந்த, 30ல் நாமக்கல் நல்லிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர் பத்மநாபன் வீட்டில் பூட்டை உடைத்து, 34.50 பவுன் நகையை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாமக்கல் - திருச்சி சாலை, பொன்விழா நகரை சேர்ந்தவர் தனியார் நிறுவன மேலாளர் லோகசெந்துார்முருகன், 38, என்பவர் சென்னைக்கும், அவரது மனைவி குழந்தைகளுடன், கரூருக்கும் சென்றுவிட்டனர். நான்கு நாட்களுக்கு பின் வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்து, 9 பவுன் நகை, 1.25 லட்சம் ரூபாய், லேப்டாப் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர். பூட்டிய வீட்டை நோட்டமிடும் மர்ம நபர்கள், தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருகின்றனர்.அதனால், வெளியூர் செல்லும் பொதுமக்கள், போலீசாரிடம் தகவல் தெரிவித்து செல்லும்படி, நாமக்கல் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் கூறியதாவது:மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை குறிவைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வருகின்றனர். அவற்றை தடுக்க, பொதுமக்கள், வெளியூர் செல்ல நேரிட்டால், இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தான், சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, திருட்டு சம்பவம் நடப்பதை தடுக்க முடியும். இதை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை