உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிறுவன் கொலை வழக்கில் தந்தை, பாட்டியைகைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியல்

சிறுவன் கொலை வழக்கில் தந்தை, பாட்டியைகைது செய்ய வலியுறுத்தி திடீர் சாலை மறியல்

ராசிபுரம்: கள்ளக்காதல் விவகாரத்தில், இரண்டு வயது சிறுவனை கொலை செய்த வழக்கில், அவரது பாட்டி, தந்தையை கைது செய்ய வலியுறுத்தி, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ராசிபுரம் அருகே கட்டனாச்சம்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் ஜெயம்மாள் (40). அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும், முத்துக்காளிப்பட்டியில் உள்ள விவசாய தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர்.கடந்த 6ம் தேதி இரவு, ஜெயம்மாளுடன் உல்லாசமாக இருக்க சுப்பிரமணி அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு, தனது மகன் வழிப் பேரன் ராகுல் (2) இருப்பதால் ஜெயம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மறுநாள் காலை வேலைக்கு சென்று திரும்பிய ஜெயம்மாள், தொட்டிலில் இருந்த பேரனைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காதால், பேரன் ராகுல் மாயமானது குறித்து, மகன் சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அது தொடர்பாக ராசிபுரம் போலீஸில், சங்கர் புகார் செய்தார். அந்த புகாரில் சுப்பிரமணி மீது சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியை (40) பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.அதில், ஜெயம்மாள் தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவரது பேரனைக் கொன்று அருகில் உள்ள சோளக்காட்டில் புதைத்துவிட்டதாக சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.அதையடுத்து, தாசில்தார் சத்தியநாராயணன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் முன்னிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும், சம்பவம் தொடர்பாக சுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, குழந்தை ராகுலின் இறப்புக்கு காரணமான சங்கர், அவரது தாய் ஜெயம்மாளையும் கைது செய்ய வேண்டும் என, ராசிபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்மந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீஸார் உறுதியளித்தையடுத்து, மக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியலால், நேற்று ராசிபுரத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ