ப.வேலூர்: 'அனைத்து பஸ்களும், ப.வேலூரில் நகருக்குள் நுழைந்து செல்ல
வேண்டும். இல்லாதபட்சத்தில் அபராதம் விதிக்கப்படும்' என, ப.வேலூர்
இன்ஸ்பெக்டர் பூபால் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள
அறிக்கை:நாமக்கல்லில் இருந்து,, ப.வேலூர் வழியாக கரூர் செல்லும் அரசு
மற்றும் தனியார் பஸ்களில், ஒருசில பஸ்களை தவிர மற்ற பஸ்கள் அனைத்தும்
ப.வேலூர் நகருக்குள் செல்லாமல் பழைய பைபாஸில் சென்று விடுகிறது. அதனால்,
பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு
உள்ளாகின்றனர்.மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அனைத்து பஸ்களும்,
ப.வேலூர் நகருக்குள் சென்று செல்ல வேண்டும். அவ்வாறு செல்லாத பஸ்கள் மீது
அபராதம் விதிக்கப்படும். மேலும், இரவு நேரத்தில், 11 மணிக்கு மேல் ஹோட்டல்,
வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக, இரவு நேர ஹோட்டல்கள் தங்களது விற்பனையை, 11 மணிக்குள்
முடித்துக்கொள்ள வேண்டும். அந்த ஹோட்டல்களில் மது அருந்துவதற்கு கண்டிப்பாக
அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அதன்
உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், அரசு அனுமதியின்றி
ஹோட்டல், டீ கடை, பீடா கடை ஆகியவற்றில் மது பானம் விற்பனை செய்யக்கூடாது.
அவ்வாறு விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி
நெருங்கி வருவதால், முறையாக அனுமதி பெற்று பட்டாசு விற்பனை செய்ய
வேண்டும்.அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தால், பட்டாசுகளை பறிமுதல்
செய்வதுடன், வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டில், அரசு உத்தரவிட்டுள்ள அளவில் மட்டுமே
எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், தங்கள் இஷ்டம்போல்
எழுதப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.ப.வேலூர்
பகுதியில், சூதாட்ட கிளப் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அது
குறித்து தகவல் தெரிவித்தால், உடனடியாக சென்று சூதாட்ட கிளப் நடத்துபவர்களை
கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சரக்கு ஆட்டோவில் ஆட்களை ஏற்றிச்
செல்வதை அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு ஏற்றிச் செல்வோர் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.