ராசிபுரம்: 'பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, மானிய
விலையில், டி,ஏ,பி. உரம் வழங்கப்படுகிறது' என, எலச்சிப்பளையம் வட்டார
வேளாண் உதவி இயக்குனர் லோகநாத பிரகாசம் தெரிவித்துள்ளார்.அவர்
வெளியிட்டுள்ள அறிக்கை:எலச்சிபாளையம் வட்டாரத்தில், தேசிய வேளாண் வளர்ச்சி
திட்டத்தின் கீழ் பயறு வகை பயிரிகளில் தரமான விதைகள் உற்பத்தி செய்யவும்,
கூடுதல் மகசூல் பெறவும், இலை மூலமாக டி.ஏ.பி., கரைசல் தெளிப்பதற்காக
மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேர் (2.50 ஏக்கர்) பயறுவகை பயிர்கள்
சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு, 25 கிலோ டி.ஏ.பி., உரம், 250 ரூபாய்
மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.இலை மூலமாக டி.ஏ.பி., கரைசலை தெளிக்கும்
போது, பயிர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைத்து, அதிக காய்கள் பிடிக்கவும்,
மணிகள் திரட்சியாக வருவதற்கும் பயன்படுகிறது. இக்கரைசலை, வயலில் போதிய
ஈரம் இருக்கும்போது, பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 15 நாட்கள் கழித்து
வயலில் போதிய ஈரம் இருக்கும்போது மறுமுறையும் தெளிக்க வேண்டும்.அதற்கு, ஒரு
ஏக்கர் வயலில் தெளிக்க முதலில் ஐந்து கிலோ டி.ஏ.பி., உரத்தை ஒரு
பிளாஸ்டிக் வாலியில், 10 லிட்டர் நீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள்
வாலியில் தெளிந்திருக்கும் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக்
கரைசலுடன் நீர் சேர்த்து, 250 லிட்டர் கரைசல் தயாரித்துக் கொள்ளவேண்டும்.கை
தெளிப்பான் மூலமாக மாலையில் தெளிக்க வேண்டும். எனவே, விவசாயிகள் பயறுவகை
பயிர்களில் கூடுதல் மகசூல் எடுக்க, வயலில் போதிய ஈரம் இருக்கும் போது
டி.ஏ.பி., கரைசலை தெளித்து பயனடைய வேண்டும். பயறு வகை பயிர்கள் சாகுபடி
செய்துள்ள விவசாயிகள், தேவைப்படும் டி.ஏ.பி., உரத்தை, எலச்சிபாளையம் வட்டார
வேளாண் துறை அலுவலர்களை அணுகி டி.ஏ.பி., உரத்தை மானிய விலையில் பெற்று
பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.