உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாலுகா ஆஃபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறைபணிகள் தேக்கம்

தாலுகா ஆஃபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறைபணிகள் தேக்கம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அனைத்து பணிகளும் தேக்கம் அடைந்துள்ளது. அதனால், அப்பாவி மக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.திருச்செங்கோடு தாலுகாவில், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம், மொளசி, வையப்பமலை ஆகிய பிர்க்காவில் உள்ள, 96 கிராமங்கள் உள்ளது.இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள், ஜாதிச்சான்று, தமிழக அரசின் உதவித்திட்டம், உழவர் அடையாள அட்டை வழங்கல், ரேஷன் கார்டு, வாரிசு சான்று, இருப்பிட சான்று, வருமான சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாறுதல், திருமண உதவித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், தாலுகா அலுவலகத்தில் அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக பணிகளில் தேக்கம் அடைந்துள்ளது. உதவியாளர்கள், 17 பேருக்கு பதிலாக, 3 பேரும், அலுவலக உதவியாளர், 10 பேருக்கு பதிலாக ஒரு பெண் உதவியாளரும் உள்ளனர். முதியோர் உதவித்தொகை பெரும் பயானாளிகள், 32 ஆயிரம் பேர் உள்ளனர்.தற்போது, முதியோருக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் அரசு வழங்குவதால், உதவிதொகை கேட்டு புது மனுக்கள் அதிக அளவில் வந்து குவிகிறது. இந்நிலையில், முதியோர் உதவித்தொகை வழங்கல் பிரிவில், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பணியிடம் நீண்ட காலமாக காலியாக உள்ளது.மேலும், ஜூனியர் அசிஸ்டெண்ட், 4 பேருக்கு இருவரும், அசிஸ்டெண்ட் இரண்டு பணியிடமும் காலியாக இருப்பதால், முதியோர் உதவித்தொகை திட்டப்பணிகளும் தேக்கம் அடைந்துள்ளது. தாலுகா அலுவலகத்தில் உள்ள பெருபான்மையான பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது.பணியில் இருக்கும் ஒரு சிலரும் பயிற்சிக்கு சென்று விடுவதால், பெரும்பாலான நேரத்தில், தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், தாசில்தார் கேம்ப் என அடிக்கடி வெளியே சென்றுவிடுவதால், அவரது அலுவலகமும் எந்நேரமும் பூட்டியே கிடக்கிறது.தாசில்தாரை பார்க்க வரும் பலர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவரை மொபைல் ஃபோனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால், பல்வேறு பணிகளும் தேக்கமடைந்துள்ளது. தாலுகா அலுவலகத்தில் பணியிடங்கள் நிரப்பினால் தான், மக்கள் நலத்திட்ட பணிகள் சிறப்பாக இருக்கும்.எனவே, 'மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தாலுகா அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை