நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 19 மையங்களில் நடந்த தேசிய வருவாய் வழி திறன் தேர்வில், 4,607 பேர் பங்கேற்றனர். 168 தேர்வர்கள் கலந்து கொள்ளவில்லை.நாடு முழுவதும், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமான, 'தேசிய வருவாய் வழி திறன்தேர்வு' திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்படி, எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், எருமப்பட்டி, மோகனுார், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் உள்பட, 19 மையங்களில் நடந்தது. இதில், 4,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 4,607 பேர் கலந்து கொண்டனர். 168 பேர் பங்கேற்கவில்லை.