மணல் கடத்தல்போலீசார் விசாரணைமோகனுார் போலீசார், நேற்று காலை, 11:00 மணிக்கு, மோகனுார் - வளையப்பட்டி சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து சேந்தமங்கலத்திற்கு, திருட்டுத்தனமாக மணல் கடத்தி செல்வது தெரிந்தது. இதையடுத்து, 5 யூனிட் மணலை பறிமுதல் செய்த போலீசார், கரூர் மாவட்டம், வெண்ணைமலையை சேர்ந்த லாரி உரிமையாளர் நந்தகுமார், 21, கரூர் மாவட்டம், ஆத்துார் நத்தமேட்டை சேர்ந்த டிரைவர் பிரவீன், 25, ஆகியோரிடம் விசாரணை நடத்துகின்றனர்.புல்வாமா தாக்குதல்நினைவேந்தல் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், தேசிய மாணவர் படை சார்பில், காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நினைவேந்தல் செலுத்தும் நிகழ்ச்சி, கல்லாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) குமாரவேலு தலைமை வகித்தார். தொடர்ந்து, உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் சவுந்திரராஜன், புல்வாமா தாக்குதல் குறித்தும், இந்திய ராணுவத்தின் தாக்குதல் குறித்து பேசினார்.டிரைவர் போதையால்தாறுமாறாக ஓடிய லாரிப.வேலுார் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று, கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி லாரி ஒன்று தாறுமாறாக சென்றது. இதைக்கண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த டிராபிக் எஸ்.ஐ., ஆனந்தன், நான்கு ரோடு சாலையில் லாரியை தடுத்து நிறுத்தினார். விசாரணையில், லாரியை ஓட்டி வந்த டிரைவர், மது அருந்திவிட்டு வந்தது தெரிய வந்தது. மேலும், சிவகாசியில் இருந்து மும்பைக்கு பட்டாசு லோடு ஏற்றிக்கொண்டு சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் செல்லாமல், தவறுதலாக ப.வேலுார் நகருக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த பெரம்பலுாரை சேர்ந்த வேல்முருகன், 43, என்பவருக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, லைசென்சை ரத்து செய்ய, பரமத்தி வேலுார் வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்தனர்.வடை சுடும் போராட்டம்தி.மு.க., மேற்கு மா.செ.,நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செயற்குழு கூட்டம், மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட அவை தலைவர் நடனசாபாபதி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் மதுராசெந்தில் தீர்மானங்களை விளக்கி பேசியதாவது:வரும் மார்ச், 1ல், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளில், அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவி வழங்க வேண்டும். பத்தாண்டுகளில், பா.ஜ., அரசு தமிழகத்திற்கு இழைத்த அநீதிகளை கண்டித்து, மோடி முகமூடி அணிந்து வடை சுடும் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினிசுரேஷ்பாபு, பள்ளிப்பாளையம் நகர்மன்ற தலைவர் செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ரோஜா பூ விலை அதிகரிப்புகாதலர் தினத்தையொட்டி, நேற்று வெண்ணந்துார் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோஜா பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம், ஒருகட்டு சிவப்பு ரோஜா, 200 ரூபாய்-க்கும், பல நிற ரோஜா ஒரு கட்டு, 280 ரூபாய்-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை முதல், ரோஜா பூக்களை வாங்க இளைஞர்கள் வருகையால், 200 ரூபாய்க்கு விற்ற ஒரு கட்டு சிவப்பு ரோஜா, 500 ரூபாய்-க்கும், 280- ரூபாய்க்கு விற்ற பல நிறங்கள் கொண்ட ரோஜா ஒரு கட்டு, 700- ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.காதலர் தினமான நேற்று, அதிகளவில் ரோஜா பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.அரசு பள்ளியில் கேமரா திருட முயற்சிநாமக்கல் - மோகனுார் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 125 ஆண்டு பழமையான இப்பள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், வினாத்தாள்கள் வைக்கும் அறை முன், இரண்டு, 'சிசிடிவி' பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்று திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராமு, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். இந்நிலையில், பள்ளி துப்புரவு பணியாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பள்ளி வளாகத்தில் உள்ள நுாலகத்திற்கு பின்புறம், திருடப்பட்ட, 'சிசிடிவி' கேமரா உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.இதுகுறித்து, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, லுங்கி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், அந்த, 'சிசிடிவி' கேமராவை கழற்றுவது, மற்றொரு கேமராவில் பதிவாகி உள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம்பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் திறக்ககோரி, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, மீண்டும் பழைய இடத்திலேயே திறக்ககோரி கோஷம் எழுப்பினர்.இ.பி.எஸ்., உதவியாளர் வீட்டில்புகுந்த மேலும் ஒருவர் சிக்கினார்நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, நாரைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 32; முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உதவியாளர். கடந்த, 9ல் இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள், 'சிசிடிவி' கேமராக்களை உடைத்து, வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். அவரது மனைவி சத்தம் போட்டதால், மர்ம நபர்கள் தப்பியோடி தலைமறைவாகினர். இதுகுறித்து விசாரணை நடத்திய ஆயில்பட்டி போலீசார், நேற்று முன்தினம், 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள, 3 பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் அளித்த தகவல்படி, துாத்துக்குடி மாவட்டம், ஆரோக்கியபுரத்தில் மறைந்திருந்த சப்பானிமுத்து மகன் அஜீத்குமார், 23, என்பவரை, நேற்று கைது செய்தனர்.இன்று தி.மு.க., செயற்குழுகூட்டம்: மா.செ., அழைப்புநாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, நாமக்கல் - மோகனுார் சாலை முல்லை நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் தலைமை வகிக்கிறார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.கூட்டத்தில், நாளை (பிப்., 16) நடக்கும், 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்' லோக்சபா தொகுதி பிரசார கூட்டம் குறித்தும், வரும் மார்ச், 1ல், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடுவது, லோக்சபா தேர்தல் மற்றும் கட்சியின் ஆக்கப்பூர்வமான பணிகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.கோழித்தீவனத்தில் வெப்ப அயற்சியை நீக்க யோசனைநாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வானிலை ஆலோசனை மையம் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட வானிலையில், கடந்த வாரம் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 96.8 மற்றும் 57.2 டிகிரி பாரன்ஹீட்டாக நிலவியது. மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும். பகல் வெப்பம், 93.2 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம், 69.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும்.தற்போது நிலவி வரும் குறைந்த இரவு வெப்பமும், அதிகரித்து வரும் பகல் வெப்பமும் கோழிகளுக்கு மிகுந்த அயற்சியை ஏற்படுத்தும். குறைந்த வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில், அதிக தீவனம் எடுக்க நேரிடும். பகலில் அதிக வெப்பம் இதற்கு நேர்மாறாக அயற்சியை ஏற்படுத்தி, எடை அதிகரித்த கோழிகளில் இறப்பை துாண்டிவிடக்கூடியது. அதனால், இருவேறு விதமான வெப்ப அளவுகளை எதிர்கொள்ளும் வகையில், தீவனத்தில் வெப்ப அயற்சியை நீக்க மருந்துகளை சேர்த்து வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் லோக்சபா தொகுதியைகாங்., கட்சிக்கு ஒதுக்க தீர்மானம்'நாமக்கல் லோக்சபா தொகுதியை, காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும்' என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் லோக்சபா தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவரும், கோவை மண்டல பொறுப்பாளருமான அழகு ஜெயபால் பங்கேற்றார். கூட்டத்தில், நாமக்கல் லோக்சபா தொகுதியை, காங்., கட்சிக்கு ஒதுக்க வேண்டும். தேர்தலில், தி.மு.க., - காங்., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும், ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஓ.பி.சி., மாநில துணைத்தலைவர் செந்தில், மாநில துணைத்தலைவர் செழியன், முன்னாள் மாநில மாணவரணி செயலாளர் பாலாஜி, மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் மகேஸ்வரி, நகர தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.ஒரே நாளில் 2,700 கிலோரேஷன் அரிசி பறிமுதல்நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, எஸ்.ஐ., பிரசன்னா, சிறப்பு எஸ்.ஐ., ஜானகிராமன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் அருகே பாச்சல் பகுதியில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 32 மூட்டைகளில், 1,600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. வாகனத்துடன், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கோவை மாவட்டம், அன்னுார் தாலுகா, அல்லிகாரன்பாளையத்தை சேர்ந்த கணேஷ், 36, என்பவரை கைது செய்தனர். தற்போது அவர், சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தில் வசித்து வருகிறார்.* இதேபோல், நாமக்கல் ரோஜாநகர் பகுதியில் முட்புதருக்கு நடுவே, 11 மூட்டைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், நாமக்கல் காதிபோர்டு காலனியை சேர்ந்த ராமச்சந்திரன், ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து, ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.ஒரே நாளில், 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.லாட்டரி விற்ற 5 பேர் கைதுதிருச்செங்கோட்டில், அரசால் தடை செய்யப்பட்ட, 'ஆன்லைன்' லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருச்செங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.இதில், ராஜா கவுண்டம்பாளையம், முனியப்பன் கோவில் அருகே லாட்டரி விற்றுக்கொண்டிருந்த, ஈரோட்டை சேர்ந்த முகமது ஹிமாமுதீன், 35, ராஜா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 33, நத்தகுமார், 37, சூரியம்பாளையத்தை சேர்ந்த சுதாகர், 44, வேலு, 52, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, மொபைல்போன்கள் மற்றும் 2,100 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், முகமது ஹிமாமுுதீன் பயன்படுத்தி வந்த வங்கி கணக்கு, 11 லட்சம் ரூபாயுடன் முடக்கப்பட்டது.குட்கா விற்ற 2 பேர் சிக்கினர் குமாரபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.இதில், கல்லங்காட்டுவலசு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குட்கா பொருட்கள் விற்ற சக்திவேல், 54, சேலம் சாலையில் உள்ள ஒரு டீ கடையில் விற்ற முத்துக்குமார், 43, ஆகிய இருவரை கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்தனர்.ரூ.15 லட்சத்திற்கு பருத்தி ஏலம்திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது.மொத்தம், 700 மூட்டைகள் வரத்தாகின. பி.டி., ரகம் குவிண்டால், 6,890 முதல், 7,540 ரூபாய், கொட்டு பருத்தி, 4,050 முதல், 5,290 ரூபாய் என, 15 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 21ல் நடக்கிறது என, மேலாளர் கணேசன் தெரிவித்தார்.பட்டப்பகலில் டூவீலர் திருட்டுதிருச்செங்கோடு தொண்டிக்கரடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 52. இவர், நேற்று காலை, 8:00 மணிக்கு வீட்டின் முன், தனக்கு சொந்தமான, 'ஹோண்டா ஆக்டிவா' டூவீலரை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. உடனே, வீட்டில் பொருத்தி உள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.அதில், மர்ம நபர் ஒருவர், லாவகமாக வண்டியை தள்ளிக்கொண்டு போவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, திருச்செங்கோடு போலீசில், செந்தில்குமார் புகாரளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* குமாரபாளையம், அய்யன்தோட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 51. குடிநீர் வடிகால் வாரிய பணியாளர். இவர் கடந்த, 27 இரவு, 8:00 மணிக்கு வீட்டின் முன், தனது, 'ஹோண்டா சி.டி.,' டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.பவர்லுாம் பிட்டர் மாயம்குமாரபாளையம் அருகே, அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி, 63; பவர்லுாம் பிட்டர். கடந்த, 21ல் காலை, 10:00 மணிக்கு, வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பவில்லை. வேலை செய்யும் இடத்திற்கு சென்று கேட்டபோது, அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், குமாரபாளையம் போலீசில், அவரது மகன் பூபதி, 34, கொடுத்த புகார்படி, பழனிசாமியை தேடி வருகின்றனர்.கோவில் பூசாரிகளுக்குதானமாக மாடு வழங்கல்திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் காளை, பசு, கன்று குட்டிகளை தானமாக வழங்குகின்றனர்.இந்த கால்நடைகளை, மாவட்டத்தில் உள்ள சிறிய கோவில் பூசாரிகளுக்கு தானமாக கொடுப்பது வழக்கம். அதன்படி, நேற்று, பசுமாடு, காளை, கன்றுடன் கூடிய பசு, சிறு கன்றுக்குட்டி என, 12 மாடுகள் தானமாக வழங்கப்பட்டன.மலைக்கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் தங்கமுத்து, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர தி.மு.க., செயலாளர் கார்த்திகேயன், திருச்செங்கோடு ஒன்றிய தி.மு.க., செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.ஏகாம்பரேஸ்வரருக்குவருஷாபிஷேகம்நாமக்கல் தட்டார தெருவில், பிரசித்திபெற்ற ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருஷாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, மோகனுார் காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. அன்று மாலை, மகா கணபதி ஹோமம் நடந்தது.தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு யாகவேள்வி, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஓய்வு அதிகாரியிடம்பணம் பறிப்புமோகனுார் காந்தமலை நகரை சேர்ந்தவர் ரங்கசாமி, 67; எல்.ஐ.சி.,யில் வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர், தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார். நேற்று காலை, 5:00 மணிக்கு, மோகனுார் காந்தமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு பின்னால் வந்த மர்மநபர், அவரது சட்டை பையில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.அதிர்ச்சியடைந்த ரங்கசாமி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மர்ம நபரை பிடிக்க விரட்டி சென்றனர். ஆனால், மர்மநபர் தப்பி ஓடி தலைமறைவானார். மோகனுார் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.மின்சாரம் தாக்கி பெண் பலி: ஆர்.டி.ஓ., விசாரணைநாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த வெங்கரையை சேர்ந்த ராமசாமி மகள் நிஷா, 29. அவருக்கும், மோகனுார் அருகே உள்ள மணப்பள்ளியை சேர்ந்த வடிவேல் மகன் விஜய், 31 என்பவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு, சபிதா, 5 என்ற மகளும், யுவன்வேல், 2, என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கூலி தொழிலாளியான விஜய், நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். காலை, 11:00 மணிக்கு, துணி துவைத்து கொண்டிருந்த நிஷா, ஈர கையுடன் வீட்டில் இருந்த மின்விசிறி சுவிட்சை போட்டுள்ளார்.அப்போது, மின்சாரம் தாக்கி நிஷா துாக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், மயங்கி கிடந்த நிஷாவை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, நிஷாவின் தந்தை ராமசாமி, மோகனுார் போலீசில் புகாரளித்தார். நிஷாவுக்கு, திருமணமாகி, 6 ஆண்டு ஆவதால், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, விசாரணை நடத்தி வருகிறார்.மாணவர்கள் கல்வியில் சிறக்கஹயக்ரீவருக்கு லட்சார்ச்சனைமோகனுாரில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க லட்சுமி ஹயக்ரீவர் லட்சார்ச்சனை பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. அதன்படி இந்தாண்டு விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு, விஸ்வக் ஷேன பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, ஹயக்ரீவர் திருமஞ்சனம், லட்சார்ச்சனை, மேதா ஹயக்ரீவர் வித்யா, தீபாராதனையும், இரவு, 8:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.இன்று முதல், வரும், 17 வரை, தினமும் காலை, 8:30 மணிக்கு லட்சார்ச்னை, அபிஷேகம், லட்சுமி ஹயக்ரீவர், மேதா சரஸ்வதி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18 காலை, 7:00 மணிக்கு, புன்யாகவாசனை, ஹோம சங்கல்பம், லட்சார்ச்சனை நிறைவு, சிறப்பு திருமஞ்சனம், அன்னதானம் வழங்குதல் நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு, ஹயக்ரீவர் உற்சவமூர்த்தி, கோவில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சுற்று எழுந்தருளி, புஷ்பாஞ்சலி, கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.