நாமக்கல்:நாமக்கல்லை சேர்ந்தவர் செந்தில்குமார், 56, ஆம்னி பஸ் உரிமையாளர். இவருக்கு சொந்தமான பஸ்சை, பொதுத்துறை காப்பீடு நிறுவனமான, 'நேஷனல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்தார். 2020ல் அந்த பஸ் சென்னை கோயம்பேடில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, பஸ் திடீரென தீப்பற்றி முழுதும் எரிந்து சேதமானது.இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாய் வழங்குமாறு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் செந்தில்குமார் மனு செய்தார். முழு தொகையையும் தர மறுத்து, பாதி தொகையை தர, காப்பீடு நிறுவனம் ஒப்புக்கொண்டது.அதனால் பாதிப்படைந்த பஸ் உரிமையாளர், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா நேற்று தீர்ப்பளித்தனர்.அதில், விபத்தில் சேதமடைந்த பஸ்சிற்கு முழு இன்சூரன்ஸ் தொகையை வழங்க மறுப்பது, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாடு. அதனால், அந்த இன்சூரன்ஸ் நிறுவனம், பஸ் உரிமையாளருக்கு, நான்கு வாரத்தில், முழு இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை, 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.மேலும், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக, 1 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். தவறினால், 2020 ஆக., முதல், பணம் வழங்கப்படும் நாள் வரை, ஆண்டுக்கு, 9 சதவீதம் வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.