சேந்தமங்கலம்: ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளை கண்டித்து, பஞ்., தலைவர் உடுக்கை அடித்து நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேந்தமங்கலம் அருகே, முத்துக்காப்பட்டி பஞ்., மேதரமாதேவியில் இருந்து சாலப்பாளையம் பிரிவு வரை, 2 கி.மீ., துாரமுள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ், கடந்த, 2020 முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், இந்த சாலையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், 4 ஆண்டுகளாக அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இதை கண்டித்தும், அதிகாரிகளை தமிழர் முறைப்படி உடுக்கை அடித்து வரவழைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்தும், முத்துக்காப்பட்டி பஞ்., அலுவலகம் முன், தலைவர் அருள்ராஜேஸ் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் உடுக்கை அடித்து நுாதன போராட்டம் மேற்கொண்டனர்.தகவலறிந்து, அங்கு வந்த தாசில்தார் சத்திவேல் மற்றும் வருவாய்துறையினர், அடுத்த மாதம் சாலையை அளவீடு செய்து கொடுப்பதாகவும், அதற்காக நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.