| ADDED : ஜூன் 07, 2024 12:15 AM
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்.,க்குட்பட்ட அன்னை சத்யா நகரில் ஓடை செல்கிறது. மழை பெய்தால் இந்த ஓடை வழியாகத் தான் மழைநீர் செல்லும். இந்த ஓடையில் அதிகளவு முட்புதர் வளர்ந்து, குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், மழைநீர் சீராக செல்ல முடியாமல் தடை ஏற்பட்டிருந்தது.கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன், இரவில் கனமழை பெய்தபோது, அருகில் உள்ள குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது, பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓடையில் முட்புதர் வளர்ந்துள்ளதால், கனமழை பெய்தால் குடியிருப்பு பகுதிக்கு மழைநீர் செல்ல வாய்ப்புள்ளதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆலாம்பாளையம் பஞ்., நிர்வாகம் சார்பில் கடந்த நான்கு நாட்களாக, மழைநீர் ஓடையில் வளர்ந்துள்ள முட்புதர், குப்பைக்கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, மழைநீர் சீராக செல்ல வழி ஏற்படுத்தப்பட்டது.