நாமக்கல்:தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்காததால், நாமக்கல் மாவட்டம் முழுதும், 4,471 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.லோக்சபா
 தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த, 16ல் அறிவிக்கப்பட்டது. அன்று 
முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 'நாமக்கல் மாவட்டத்தில், 
பொது இடம் மற்றும் தனியாருக்கு சொந்தமான பகுதிகளில், அரசியல் 
கட்சியினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், 
போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை தாமாகவே முன்வந்து அழிப்பதுடன், 
அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் வழக்குப்பதிவு 
செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 
ஆங்காங்கே எழுதப்பட்ட சுவர் விளம்பரம், போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை 
அகற்றினர்.ஆனால், பல்வேறு இடங்களில், அழிக்கப்படாமல் இருந்த 
சுவர் விளம்பரம், போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை, அந்தந்த பகுதியில் உள்ள 
நகராட்சி, பஞ்., பணியாளர்கள் அகற்றினர். அதன்படி, ராசிபுரம் 
சட்டசபை தொகுதியில், 841, சேந்தமங்கலம், 307, நாமக்கல், 618, 
ப.வேலுார், 417, திருச்செங்கோடு, 323, குமாரபாளையம், 903 என, பொது 
இடங்களில் இருந்த சுவர் விளம்பரம், போஸ்டர், பிளக்ஸ் பேனர் மற்றும் 
மற்றவை என, மொத்தம், 3,409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும்,
 தனியார் இடங்களில் அகற்றாமல் இருந்த வகையில், ராசிபுரம், 559, 
சேந்தமங்கலம், 91, நாமக்கல், 209, ப.வேலுார், 4, திருச்செங்கோடு, 199
 என, மொத்தம், 1,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.