சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும் 7 ரயில் நாமக்கல் வழியாக இயக்க கோரிக்கை
நாமக்கல், 'சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக செல்லும், ஏழு ரயில்களை, நாமக்கல் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நாமக்கல் மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன், மத்திய இணை அமைச்சர் முருகனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சேலத்தில் இருந்து ஈரோடு - கரூர் வழியாக செல்லும் வண்டி எண். 16788 கட்ரா - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்; கோவா வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணி வரை செல்லும் வண்டி எண். 17315 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்; கச்சேகுடாவில் இருந்து மைசூர் செல்லும் வண்டி எண். 22715 வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்.ஓகாவில் இருந்து துாத்துக்குடி வரை செல்லும் வண்டி எண். 19568 வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்; சண்டிகாரில் இருந்து மதுரை செல்லும் வண்டி எண். 20494 சூப்பர் பாஸ்ட் வாரம் இருமுறை செல்லும் ரயில்; தினசரி மைசூரில் இருந்து கூடலுார் வரை செல்லும் எண்டி எண். 16232 எக்ஸ்பிரஸ் ரயில்; மைசூரில் இருந்து துாத்துக்குடி வரை செல்லும் வண்டி எண். 16236 தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய, ஏழு ரயில்களை, சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக கரூர் செல்லும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்.இதன் மூலம், இந்த ரயில்களின் பயண துாரம், 40 கி.மீ., குறையும். ஒரு மணி நேரத்திற்கு மேல் பயண நேரம் மிச்சமாகும். மேலும், இந்த ஏழு ரயில்களும், நாமக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.