உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் 1,866 மாணவர்களுக்கு ரூ.74.61 கோடி கல்விக்கடன் உதவி

நாமக்கல்லில் 1,866 மாணவர்களுக்கு ரூ.74.61 கோடி கல்விக்கடன் உதவி

ராசிபுரம்: ''மாவட்டத்தில் மாணவ, மாணவியர், 1,866 பேருக்கு, 74.61 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது,'' என எம்.பி., ராஜேஸ்குமார் கூறினார்.ராசிபுரம் அடுத்த பாச்சலில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நேற்று கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார் கல்விக்கடனுக்கான காசோலையை மாணவ, மாணவியருக்கு வழங்கி பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் இந்த கல்வி ஆண்டு, 2,383 பேருக்கு, 38 கோடி ரூபாய் கல்வி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் வரை, 1,694 பேருக்கு, 61.65 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று, 172 பேருக்கு, 12.96 கோடி கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் இந்த கல்வி ஆண்டில், 1,866 பேருக்கு, 74.61 கோடி கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடன் என்பது மாணவ, மாணவியர் பெறும் கடன் அல்ல. அது அரசு மேற்கொள்ளும் ஒரு முதலீடு ஆகும். நீங்கள் பெறும் கல்வி கடனை வேலைக்கு சென்றவுடன் குறிப்பிட்ட காலத்தில் திரும்பி செலுத்திட வேண்டும். நீங்கள் திரும்பி செலுத்தும் கடன் மற்றொரு மாணவரின் கல்விக்கு நீங்கள் செய்திடும் உதவி.இவ்வாறு பேசினார்.புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜாத்தி, ஞானமணி கல்வி நிறுவன தலைவர் அரங்கண்ணல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ