எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கோம்பை, நவலடிப்பட்டி, தோட்டகூர்பட்டி, வரகூர் உள்ளிட்ட பகுதிகளில், புரட்டாசி பட்டமாக சூப்பர் பொன்னி, டீலக்ஸ் பொன்னி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட ரக நெற்பயிர்களை, விவசாயிகள் நடவு செய்துள்ளனர். நெற்பயிர்கள் நடவு செய்து, 60 நாட்களை கடந்த நிலையில், குருத்துகள் விட தொடங்கின. தொடர் மழை பெய்து வருவதால், நோய் தாக்காமல் பாதுகாக்க, தடுப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒருசில விவசாயிகள், யூரியா, வேப்பன் பவுடர், உரம் உள்ளிட்டவைகளை கலப்பு உரமாக கலந்து தெளித்து வருகின்றனர். சில விவசாயிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து வருகின்றனர்.இதுகுறித்து, கோம்பையை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறுகையில், ''எருமப்பட்டி பகுதியில், 200 ஏக்கரில், புரட்டாசி பட்டமாக நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்த நெற்பயிர்கள், தற்போது குருத்து விடும் நிலைக்கு வந்துள்ளதால், நெற் பயிரில் நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளித்து வருகிறோம்,'' என்றார்.