உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கல்லுாரியில் சேர்க்காததால் முதல்வர் அறையில் மாணவர் தர்ணா

அரசு கல்லுாரியில் சேர்க்காததால் முதல்வர் அறையில் மாணவர் தர்ணா

ராசிபுரம்: அரசு கல்லுாரியில், முதுகலை பிரிவில் சேர்க்கை வழங்காததால், முதல்வர் அறையில் மாணவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், ஆண்டகளூர்கேட் பகுதியில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லுாரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப்பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு இளங்கலை படிப்பை, தொட்டிப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தங்கராஜ், 23, கடந்தாண்டு முடித்துள்ளார். இந்த ஆண்டு முதுகலையில் வரலாறு பிரிவில் படிக்க ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.நேற்று மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் நடந்துள்ளது. இதற்கு தங்கராஜை அழைத்துள்ளனர். நேர்காணலில் தங்கராஜை பார்த்த பேராசிரியர்கள், அவரை கல்லுாரியில் சேர்க்க அனுமதி மறுத்துவிட்டனர். தங்கராஜ் எஸ்.எப்.ஐ., மாணவர் அமைப்பில், நாமக்கல் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். அப்போது, கல்லுாரி நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். இதனால் மாணவருக்கு சேர்க்கை வழங்க கல்லுாரி நிர்வாகம் மறுத்துவிட்டதாக தங்கராஜ் தெரிவித்தார். இதனால், 'எனது படிப்பு, எனது உரிமை' எனக்கூறி, கல்லுாரி முதல்வர் பானுமதி அறையில், நேற்று மாலை வரை தங்கராஜ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், கல்லுாரி மண்டல இயக்குனர் சிந்தியா செல்வி, முதல்வர் பானுமதி மற்றும் மாணவர் தங்கராஜ் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்று காலை மாணவரை கல்லுாரிக்கு வரச்சொல்லியும், முதல்வரிடம் குறிப்பிட்ட பாடத்தில் சேர்க்கவும் அறிவுறுத்தி சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ