உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட வசதி 12டி படிவத்தில் தகவல் தெரிவிக்கணும்

வீட்டில் இருந்தபடி ஓட்டுப்போட வசதி 12டி படிவத்தில் தகவல் தெரிவிக்கணும்

நாமக்கல் : 'மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தபடி ஓட்டளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு, '12டி' படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்கலாம்' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்திய தேர்தல் ஆணையம் வரும், லோக்சபா தேர்தலில், 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்டோர்) ஆகிய பிரிவினருக்கு, வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு மூலம் ஓட்டுப்போடும் வசதியை வழங்கி உள்ளது. இந்த வசதியை பெறுவதற்காக, '12டி' என்ற படிவத்தில், தங்களது விருப்பத்தை மேற்காணும் வாக்காளர்கள் தெரிவிக்க வேண்டும். மேற்படி படிவத்தை, தங்கள் பகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கே, நாளை (மார்ச், 20) முதல், 24 வரை நேரில் வந்து வழங்குவர்.வீட்டில் இருந்து ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தவர்கள் வீட்டிற்கு, இரண்டு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு பாதுகாவலர் அடங்கிய ஓட்டுப்பதிவு குழு சென்று, வாக்காளரை தபால் ஓட்டுச்சீட்டில் ஓட்டுப்போட செய்யும். இந்த ஓட்டுப்பதிவின் ரகசியம் காக்கப்படும். ஓட்டுப்பதிவு குழு வருகை தரும் தேதி, நேரம் குறித்து படிவம், '12டி' விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு, குறுஞ்செய்தி, தபால் அல்லது ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் முன்னரே தெரிவிக்கப்படும்.முதல் வருகையின் போது கொடுக்கப்பட்ட முகவரியில் வாக்காளர் இல்லை என்றால், ஓட்டு சேகரிக்கும் குழுவானது, அவர்களின் இரண்டாவது வருகையின் தேதி மற்றும் நேரத்தை அறிவிப்பார்கள். இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லை என்றால், மேற்கொண்டு மறுவருகையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படமாட்டாது.தபால் ஓட்டு மூலம் வீட்டில் ஓட்டுபோடும் வசதியை தேர்வு செய்பவர்கள், ஓட்டுப்பதிவு நாளில் நேரடியாக ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட முடியாது. மேலும், ஓட்டுப்பதிவு குழுவின் இரண்டாவது வருகையின் போதும் வீட்டில் இருக்க தவறிய வாக்காளர்களுக்கு, தபால் ஓட்டு சீட்டு மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் ஆகிய இரண்டிலும் ஓட்டுப்போடும் வாய்ப்பை இழக்க நேரிடும். ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தேவையான இடங்களில் உதவ சாய்வுதளம், சக்கர நாற்காலிகள், காத்திருப்பு பகுதி, கழிப்பறைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி