| ADDED : மார் 29, 2024 01:20 AM
சேந்தமங்கலம்:கொல்லிமலை
கொண்டை ஊசி மலைப்பாதையில் பரவிய காட்டுத்தீயை, தீயணைப்பு வீரர்கள்
கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், 25 ஹெக்டேர் பரப்பளவில்
இருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.கொல்லிமலை, கொண்டை ஊசி
மலைப்பாதையில், கடந்த, 4 நாட்களாக மூங்கில் மரங்கள் தொடர்ந்து
தீப்பிடித்து எரிந்தன. இந்த தீயை அணைக்கும் பணியில் வனத்துறை,
தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், கொளுத்தும்
வெயிலால், தொடர்ந்து காட்டு தீ பரவி வந்தது. இதனால், மலைப்பாதையில்
கடும் புகை மூட்டம் காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதித்திருந்த
நிலையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல
அனுமதிக்கப்பட்டது. மேலும், வனத்துறை அலுவலர் கலாநிதி தலைமையில்,
தொடர்ந்து தீ தடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு, நேற்று
காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதுகுறித்து, மாவட்ட வன
அலுவலர் கலாநிதி கூறியதாவது: கடந்த, 4 நாட்களாக, கொல்லிமலை
கொண்டை ஊசி மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
தற்போது, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு
சில இடங்களில் புகைந்து கொண்டுள்ளது. அதை அணைக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளோர். இந்த காட்டுத்தீயால், 25 ஹெக்டேர் பரப்பளவில்
மரங்கள் எரிந்து சாம்பலாகின.இவ்வாறு அவர் கூறினார்.