குன்னுார்:நீலகிரி தொகுதியில் ராஜாவுக்கு 'செக்' வைக்க இரு கட்சிகள் வியூகம் வகுத்து பணியாற்றி வருகின்றன.மலை மாவட்டத்தில், குன்னுார், ஊட்டி, கூடலுார் சமவெளியில் மேட்டுப்பாளையம், அன்னுார், பவானிசாகர் உள்ளடக்கிய, நீலகிரி லோக்சபா தனி தொகுதியில், 4வது முறையாக தி.மு.க., சார்பில் களம் இறங்கும் ராஜாவிற்கு 'செக்' வைக்க, பா.ஜ.,- அ.தி.மு.க., இரு கட்சியினரும் வியூகம் வகுத்து வருகின்றனர்.சிட்டிங் எம்.பி.,யான ராஜாவின், இந்து விரோத பேச்சுகளில், 'சனாதன ஒழிப்பு, இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; பசுவையும் குரங்கையும் வணங்குகின்ற காட்டுமிராண்டிகள்,' போன்ற 'வீடியோக்கள்' தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி , 2016ல், ஜூன் மாதம் கோத்தகிரியில் தி.மு.க., கட்சியினர் ராஜா மீது செருப்பு வீசிய வீடியோவும், 2ஜி ஊழல் குறித்த தற்போதைய தகவல்களும் வைரலாக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் தி.மு.க.,மாவட்ட செயலாளர் முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோரிடையே தொடரும் கோஷ்டி பூசல் குறித்தும் தகவல்கள் சமூக வலைதளங்ளில் பரப்பப்படுகின்றன.இதன் மூலம் நீலகிரியின் பெரும்பான்மை மக்களான படுகரின மக்கள் உட்பட பிற மக்களின் ஓட்டுகளை 'அறுவடை' செய்ய அ.தி.மு.க.,- பா.ஜ., கட்சிகள் பணியாற்றி வருகின்றன.