| ADDED : ஜூலை 08, 2024 12:23 AM
பந்தலுார்:பந்தலுார் அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 30 ஆண்டு சமையலர் பணி செய்து, ஓய்வு பெற்ற சமையலருக்கு பாராட்டு விழா நடத்தி பழங்குடியின மாணவர்கள் வழி அனுப்பி வைத்தனர்.பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில், பென்னை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பள்ளி காப்பக எல்லையை ஒட்டிய வெளிப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த, 30 ஆண்டுகளாக சமையலராக பணியாற்றி வந்த சுசிலா, பணி ஓய்வு பெற்றதை ஒட்டி பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வழி அனுப்பும் விழா நடத்தினர். நிகழ்ச்சியில், ஆசிரியர் லைசா வரவேற்றார். தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்து பேசியதாவது:வனத்திற்கு மத்தியில் செயல்பட்டு வந்த இந்த பள்ளியில் கடந்த, 27ஆண்டுகளாக பழங்குடி மாணவர்களுக்கு தேவையான, அரிசி, காய்கறிகள், முட்டை என அனைத்தையும், 2 கி.மீ., துாரம் தலைசுமையாக சுமந்து வந்து, சமையல் செய்து வழங்கியவர் சுசிலா. பல நாட்கள் யானை மற்றும் சிறுத்தை, புலியிடமிருந்து உயிர் தப்பி வந்து, இந்த பணியை நிறுத்தாமல் செய்துள்ளார். வேறு யாரும் இந்த பணிக்கு வந்திருக்க மாட்டார்கள். 3 ஆண்டுகளாக தான் இந்த பள்ளி வனத்துக்கு வெளி பகுதியில் செயல்பட்டு வருகிறது.அரசு தரும் பணியை 'கடமைக்கென' செய்யாமல் அதனை தன் முக்கிய கடமை என்று செய்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு விழா நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்,'' என்றார். தொடர்ந்து, பழங்குடியின மாணவர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஆசிரியர் ஹில்டா ஜான்சி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீ ஜென், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி, அனிதா, சுசித்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.