32 கோடி சுற்றுலா பயணியர் நடப்பாண்டில் தமிழகம் வருகை
ஊட்டி:நடப்பாண்டில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தமிழகத்திற்கு, 32 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டி படகு இல்லத்தில் தனியார் பங்களிப்புடன் சாகச விளையாட்டு பணிகள், தேனிலவு படகு இல்லம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மரவீடு பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின், சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ''நடப்பாண்டில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து, 32 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். மாநில சுற்றுலாத்துறை மூலம், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா தலங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசிடம், 170 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. அந்த நிதி விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். நீலகிரியில் சுற்றுலா வளர்ச்சி கழக கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மேம்பாட்டு பணிகள் செய்வது குறித்து பார்வையிட்டோம். ஊட்டியில் உள்ள இளைஞர் விடுதிகள் மேம்படுத்தப்படும்.'' என்றார்ஆய்வின் போது, சுற்றுலாவளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சமயமூர்த்தி உடனிருந்தார்.