| ADDED : மார் 27, 2024 12:59 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாணவி பொது தேர்வு எழுதியதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே பாட்டவயல் கரும்பன்மூலா பகுதியை சேர்ந்தவர்கள் சைனுதின், சீனத் தம்பதி. இவர்களுக்கு பாத்திமத்து சுகைனா, ஷப்னா ஜாஸ்மின்ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் எலும்பு சிதைவு நோய் உள்ளதால், உடல் வளர்ச்சி குன்றி எழுந்து நடமாட முடியாமலும், கை கால்களை நீட்ட முடியாமலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.சைனுதின் கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், தாயாரின் பராமரிப்பில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இருவரும் பிதர்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். அதில், சுகைனா கடந்த பிளஸ்- 2 பொதுத்தேர்வை உதவியாளர் துணையுடன்எழுதினார். அவரின் தங்கை ஜாஸ்மின் நேற்று துவங்கிய, 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்கு, ஆம்புலன்ஸ் வாகனத்தில், பிதர்காடு அரசு மேல்நிலைபள்ளிக்கு தந்தை சைனுதின் மற்றும் அவரின் நண்பர்கள் லத்தீப், செபீக் ஆகியோர் உதவியுடன் அழைத்து வரப்பட்டார்.ஸ்ட்ரெச்சரில் வைத்து தேர்வு அறைக்கு துாக்கி சென்று, அதில் படுத்தவாரே உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதினார்.தங்கை மனது சோர்ந்து விடாமல் இருப்பதற்காகசகோதரி சுகைனாவும் உடன் வந்து தேர்வு அறைக்கு வெளியே ஆம்புலன்சில் அமர்ந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.