மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
23 hour(s) ago
மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவில் நந்தவனம், குப்பை மேடாக மாறி உள்ளது. கோவை மாவட்டத்தில், மிகவும் பழமையான வைணவ ஸ்தலங்களில், பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காரமடையில் தோலம்பாளையம் சாலையில், இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்துச் சென்று, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.இந்த குளத்தின் அருகே இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில், கிணறு மற்றும் மின் இணைப்புடன் கூடிய நந்தவனம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இந்த நந்தவனத்தில் பூச்செடிகளும், துளசியும் வளர்த்துள்ளனர். பூக்களையும், துளசியையும் அறுவடை செய்து, அரங்கநாத பெருமாளுக்கு மாலையாக கட்டி பூஜைகள் செய்து வந்துள்ளனர். காலப்போக்கில் இந்த நந்தவனத்தை சரியாக பராமரிக்காமலும், புதிதாக பூச்செடிகள் நடவு செய்யாமலும் விட்டுள்ளனர். அதனால் நந்தவனம் பொட்டல் காடாக மாறியது. நந்தவனத்தின் நுழைவுப் பகுதியில், கோவிலின் 'கோ' சாலை உள்ளது. வேண்டுதல் காணிக்கையாக பக்தர்கள் வழங்கும் கன்று குட்டிகள், பசு மாடுகள், கோ சாலையில் பராமரித்து வருகின்றனர். இந்த கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களும், வெளியே விலை கொடுத்து வாங்கப்படுகின்றன. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம், பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கோவிலில் சீரமைப்பு திருப்பணிகள் நடைபெற்ற போது, பழைய கட்டட கழிவு மண், இடித்த சுவர்கள், கற்கள் ஆகியவற்றை நந்தவனத்தில் குவித்து வைத்துள்ளனர். தண்ணீர் மற்றும் மின்சார வசதி இருப்பதால், கோவிலுக்கு தேவையான பூச்செடிகளை வளர்ப்பதோடு, கோசாலையில் உள்ள கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தையும் வளர்க்க போதுமான இடம் உள்ளது. ஆனால் கோவில் நிர்வாக அதிகாரிகள், நந்தவனத்தில் பூச்செடிகள் நடவு செய்யாமல் விட்டதால், நந்தவனம் முள் காடாக மாறி உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சுவாமிக்கு பூக்கள், மாலைகள் வாங்குகின்றனர். அதே போன்று, கோ சாலையில் உள்ள கால்நடைகளுக்கும், விலை கொடுத்து தீவனம் வாங்குகின்றனர். கோவிலுக்கு தேவையான பூக்களையும், கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்களையும் நந்தவனத்தில் வளர்க்க, நந்தவனத்தில் வளர்ந்துள்ள முள் மரங்களை அகற்றி, அதை ஒரு பூங்காவனமாகவும், கால்நடைகளுக்கு தேவையான, தீவனப் பயிர்கள் வளர்க்கும் விவசாய நிலமாகவும் மாற்ற, கோவில் அதிகாரிகளும், அறங்காவலர் குழுவினரும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் கூறினர்.
23 hour(s) ago