| ADDED : ஜூன் 05, 2024 08:21 PM
கோத்தகிரி : கோத்தகிரி சுண்டட்டி 'கோம்ஸ்' நீர்வீழ்ச்சியில் ஆபத்தை உணராமல் செல்லும் சுற்றுலா பயணிகளால் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கோத்தகிரியில் இருந்து, 16 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது சுண்டட்டி கிராமம். இக்கிராமம் அருகே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கோம்ஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும் இந்த நீர்வீழ்ச்சி, சுற்றுலா வரைப் படத்தில் இடம்பெறவில்லை. இருப்பினும் சுற்றுலா பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் குளிப்பதற்காக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.இங்கு வருபவர்கள் நீர்வீழ்ச்சியை ஒட்டி, வனப்பகுதியில் சமைத்து, கழிவுப் பொருட்களை அங்கேயே வீசி செல்வது தொடர்கிறது. இதனால், கழிவுகளை உண்ணும் வன விலங்குகளுக்கம், வனப்பகுதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம், 'தடை செய்யப்பட்ட பகுதி' என, வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பை பொருட்படுத்தாமல், தடையை மீறி, 'கூகுள் மேப்' உதவியுடன், அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில், ஆபத்தை உணராமல் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று குளித்த சுற்றுலா பயணிகள் நான்கு பேர், பாறையில் வழுங்கியும், சுழலில் சிக்கியும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.எனவே, சுற்றுலாப் பயணிகள் உட்பட, உள்ளூர் மக்கள் நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்லாத வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.