இளைஞர் தற்கொலை
திருப்பூர் மாவட்டம் அவினாசி சேவூரை சேர்ந்தவர் மாரிமுத்து, 32. இவர், உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறுமுகை அடுத்துள்ள இரும்பறை, பட்டக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தியா,26 என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது. தற்போது கணவன், மனைவி இருவரும் பட்டக்காரன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் மாரிமுத்து குடும்ப செலவுக்காக வெளியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர். ---கால் டாக்ஸி டிரைவர் மாயம்
கவுண்டம்பாளையம் காந்திஜி வீதியில் வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வினோத் வெங்கடேஸ்வரன், 37, கால் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த, 28ம் தேதி கால் டாக்ஸி டிரிப்புக்காக திருநெல்வேலி மாவட்டம் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவருடைய மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து, வினோத் வெங்கடேஸ்வரன் தந்தை ராதாகிருஷ்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்றவர் கைது
காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்.ஐ., பழனியாண்டி தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர ரோந்து மேற்கொண்டனர். அப்போது கண்ணார்பாளையம் சுடுகாடு பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அதன் பின் விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சனாதன் போய், 26, என தெரிய வந்தது. மேலும், அவர் அன்னூர் குப்பேபாளையம் பகுதியில் வசித்து வருகிறார் எனவும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இவரை கைது செய்த போலீசார், இவரிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.--