உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பருவ மழையின் போது பயிர்கள் பாதுகாப்பு: தோட்டக்கலை துறை அறிவுரை

பருவ மழையின் போது பயிர்கள் பாதுகாப்பு: தோட்டக்கலை துறை அறிவுரை

ஊட்டி;நீலகிரியில் பருவ மழையின் போது பயிர்களை பாதுகாக்க தோட்டக்கலைத் துறை அறிவுரை வழங்கியுள்ளது.மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலக செய்தி குறிப்பு:தோட்டக்கலை பயிர்களான, வாழை, முட்டைக்கோஸ், பூண்டு, இஞ்சி, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் உள்ளிட்ட பயிர்களுக்கு, வயல்களில் அதிக நீர் தேங்காத வகையில், வடிகால் வசதி அமைத்து, நீர்பாசனம் மற்றும் உரமிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.மேலும், காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில், குச்சிகளால் முட்டு கொடுத்து, புதிதாக நடவு செய்த செடிகள் சாயாதவாறு பாதுகாக்க வேண்டும். பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, எலுமிச்சை, எலுமிச்சை கிராம்பு மற்றும் ஜாதிக்காயில், காய்ந்த கிளைகளை அகற்றி, மரங்களின் எடையை குறைப்பதுடன், மரங்களின் தண்டு பகுதியில் மண்ணைக் குவிக்க வேண்டும்.தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி ஏற்படுத்தி, நோய் தடுப்பு மருந்துகள் வேர்ப்பகுதியில் நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும், இளம் செடிகள் காற்றினால் பாதிக்காத வகையில், தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும்.கனமழை, காற்று முடிந்தவுடன், மரங்களில் பாதிப்பு இருப்பின், வேர் பகுதியை சுற்றி மண் அணைத்து, பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்றி, மரங்களுக்கு தொழு உரமிட்டு, தொற்று நோய் தடுப்பு முறையை பின்பற்ற வேண்டும்.மிளகு பயிரில் உரிய வடிகால் வசதி செய்து, 'ட்ரைக்கோ டெர்மா விரிடி' மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சான உயிரியல் கொல்லி மருந்துகளை வேர் பகுதி யில் இட்டு நோய் வராமல் தடுக்கலாம். மேலும், தாங்கு செடிகளில் நிழலை ஒழுங்குபடுத்த, கிளைகளை புரூனிங் செய்ய வேண்டும்.கொக்கோ பயிரில் காய்ந்து போன இலை, கிளைகளை அகற்றி மரத்தின் தண்டு பகுதியில் போர்டோ கலவையை தெளிக்க வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்து, சிறிய செடிகளை தாங்குக் குச்சிகளோடு கயிற்றால் கட்ட வேண்டும்.வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண்ணை அணைத்து, கம்புகளை முட்டுக் கொடுக்க வேண்டும். மேலும், வாழைதார்களை மூடி வைத்து, முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். பசுமை குடில்களை பொறுத்தவரை, பசுமை குடிலின் அடிபாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைத்து, காற்று புகாமல் இருக்க, கதவு கள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடவேண்டும். நிழல்வலை குடில்களில் கிழிந்த நிழல்வலைகளை தைத்து, அடிபாகம் பலமாக நிலத்துடன் கம்பிகளால் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்