| ADDED : மே 29, 2024 10:01 PM
கூடலுார்:கூடலுார் ஜீன்பூல் தாவர மையத்திலிருந்து, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், முதுமலைக்கு வாகன சவாரி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் உள்ள, புலி, யானை, சிறுத்தை, மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்களை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள், தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, வனத்துறை வாகன மூலம் வனப்பகுதிக்குள் காலை, மாலை அழைத்து சென்று வருகின்றனர்.இந்நிலையில், கூடலுார் நாடுகாணி சூழல் சுற்றுலா தாவர மையத்துக்கு வரும், சுற்றுலா பயணிகளை, முதுமலைக்கு வாகன சவாரி அழைத்து செல்லும் வசதியை வனத்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். தற்போது இதன் பயன்பாட்டுக்காக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, பாண்டியார்- புன்னம்புழா ஆற்றில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு வாகனம் மூலம் அழைத்து சென்று வருகிறோம். இங்கு உள்ள விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளை, வனத்துறை வாகனம் மூலம் ஜீன்பூலிருந்து நேரடியாக முதுமலை வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகிறோம். இதற்காக தனியாக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதேபோன்று பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சூழல் சுற்றுலா தளங்களுக்கும் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்கிறோம்,' என்றனர்.