| ADDED : ஆக 20, 2024 02:02 AM
கூடலுார்:கூடலுார், புத்துார்வயல் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள், வயலில் இறங்கி நெற் பயிர்களை மிதித்து சேதப்படுத்தி சென்றன.கூடலுார் பகுதி வயல்களில் கோடையில் காய்கறிகளும்; பருவமழை காலத்தில் நெல்லும் பயிரிட்டு வருகின்றனர். நடப்பாண்டு, சரியான நேரத்தில் பருவமழை கிடைத்ததால், விவசாயிகள் விதைகள் நெல் விதைத்து, ஆடி மாதத்தில் நாற்றுகளை பறித்து நடவு செய்தனர். சில விவசாயிகள், விதை நெல்லை, நேரடியாக வயல்களில் விதைத்தனர். நெற்பயிர்களுக்கு தேவையான பாசன நீர் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், காட்டு யானைகளால் அச்சமடைந்துள்ளனர்.இந்நிலையில், புத்துார் வயல் அருகே, தேன்வயல் கிராமத்தில் நுழைந்த இரண்டு காட்டு யானைகள், வாழை மற்றும் பாக்கு மரங்களை சேதப்படுத்தின.தொடர்ந்து, பென்னி என்பவரின் வயலில் முகாமிட்டு, நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. சப்தம் கேட்டு வந்த விவசாயிகள் அவைகளை விரட்டினர்.விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு சரியான நேரத்தில் பருவமழை பெய்ததால், விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வயல்களில் யானைகள் நுழைந்து, நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்த துவங்கி இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. வன ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, காட்டு யானைகள் வயல்களில் நுழைவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.