ஊட்டி;குந்தா அணையில் சகதி மற்றும் கழிவுகள் அதிகரித்து, புதர்மண்டி வருவதால், மின் உற்பத்திக்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மஞ்சர் அருகே குந்தா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கு ராட்சத குழாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு, நாள்தோறும், 450 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. குந்தா அணை நீர்ப்பிடிப்பு பகுதியை சுற்றி தேயிலை, மலை காய்கறி தோட்டம் அதிகளவில் உள்ளது. இவற்றில் இருந்து, மழை சமயத்தில் அடித்து வரப்படும் சேறு சகதியால், குந்தா அணையின் மொத்த அடியான, 89 அடியில், பாதி அளவுக்கு சேறு மற்றும் பிற கழிவுகள் நிறைந்துள்ளன. நிதி இருந்தும் பிரச்னை தீரவில்லை
கடந்த சில நாட்களாக பெய்த மழையாலும், சகதி அதிகரித்துள்ளது. சகதியை அகற்ற மின்வாரியம் நடவடிக்கை எடுக்காததால், பிற அணைகளுக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நுழைவுவாயிலில் புதர் மண்டியுள்ளது.நாளுக்கு நாள் சகதி அதிகரித்து வருவதால், தண்ணீர் கொண்டு செல்லும் ராட்சத குழாய், மின் நிலையத்தின் கருவிகள் பாதிக்கப்படுவதுடன் உற்பத்தியும் அடிக்கடி தடைபடுகிறது. தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'குந்தா அணையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சகதியால் ஏற்படும் பாதிப்பு குறித்து சென்னை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியும் தயார் நிலையில் உள்ளது. முக்கிய பிரச்னை என்னவென்றால், குந்தா அணையிலிருந்து அகற்றப்படும் பல ஆயிரம் டன் சகதிகளை கொட்டுவதற்கு இடம் கிடைக்கவில்லை. ஒரு சில பகுதிகளை பார்த்தோம் அந்த இடங்கள் சதுப்பு நிலம் என, சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பிரச்னை அனைத்தும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். உரிய தீர்வு காணப்படும்,' என்றனர். வீணாக வெளியேறிய உபரி நீர்
கடந்த ஒரு வாரம் பெய்த பருவமழையில் இரண்டு மணி நேரம் கன மழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. குந்தா அணை ஏற்கனவே பாதி அளவு சகதியால் கடந்த,17 ம் தேதி காலை, 7:00 மணியளவில் அணைக்கு, வினாடிக்கு, 300 கன அடி தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. 19 ம் தேதி இரவு, 8:00 மணி வரை பல ஆயிரம் கன அடி உபரி நீர் வீணாக வெளியேறியது. இங்குள்ள சேறு சகதியை அகற்றும் பட்சத்தில் வீணாகும் நீரை மின் உற்பத்திக்கு சேமிக்க முடியும்.